இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலி

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்க்கெய் லெவ்ரோவ் சனிக்கிழமை ஒத்துக்கொண்டுள்ளார். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையேயான மோதலால் ஜார்ஜியாவில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிலையில் ரஷியாவின் தாக்குதலில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜார்ஜியா நினைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, கடந்த சில தினங்களாக ஜார்ஜியா மீது நடத்தி வரும் தாக்குதலை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஜார்ஜியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் ரஷியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. பிரச்னையை சர்வதேச நடுநிலைக் குழு மூலம் சுமுகமாகத் தீர்த்து வைக்க ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும் என, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ள தங்களது நாட்டுப் படை வீரர்களை எந்தச் சூழ்நிலையிலும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ஜார்ஜியாவுடனான போர்நிறுத்த உடன்பாட்டை நிலைநிறுத்த முயற்சிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. எச்சரிக்கை: ஜார்ஜிய ராணுவத்துக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. கண்டித்துள்ளது. ஜார்ஜியாவில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நிலைமை மோசமாகி வருகிறது. இதை தான் கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தங்கள் வசம் கொண்டுவர ஜார்ஜியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள ரஷியப் படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை வெள்ளிக்கிழமை முற்றியது. ரஷியப் படைகள் மீது ஜார்ஜியா படை திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தியது.