இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வன்னி மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் நிலை - ஐ.நா. முகவர் அமைப்புக்கள் தகவல்


வன்னியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சுக்களும் ஷெல் தாக்குதல்களும் எந்த வேளையிலும் இடம்பெறலாம் என்ற சூழ்நிலையில் அச்சத்தின் மத்தியிலேயே மாணவர்கள் பரீட்சைக்குச் செல்கின்றனர் என ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் ஏற்கனவே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி பரீட்சை ஆரம்பமான பின்னர் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களால் பரீட்சை நிலையங்களை இடம் மாற்ற வேண்டி ஏற்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஐ.நா. வின் முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு, வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால் வன்னியில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு தொடரும் விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் மாணவர்கள் அச்சத்தின் மத்தியிலேயே பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிதாக இடம்பெயரும் மக்கள் தற்காலிக தங்குமிடத்தையும் உணவையும் பெறுவதற்கே பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.