இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலி

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்க்கெய் லெவ்ரோவ் சனிக்கிழமை ஒத்துக்கொண்டுள்ளார். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையேயான மோதலால் ஜார்ஜியாவில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிலையில் ரஷியாவின் தாக்குதலில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜார்ஜியா நினைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, கடந்த சில தினங்களாக ஜார்ஜியா மீது நடத்தி வரும் தாக்குதலை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஜார்ஜியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் ரஷியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. பிரச்னையை சர்வதேச நடுநிலைக் குழு மூலம் சுமுகமாகத் தீர்த்து வைக்க ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும் என, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ள தங்களது நாட்டுப் படை வீரர்களை எந்தச் சூழ்நிலையிலும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ஜார்ஜியாவுடனான போர்நிறுத்த உடன்பாட்டை நிலைநிறுத்த முயற்சிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. எச்சரிக்கை: ஜார்ஜிய ராணுவத்துக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. கண்டித்துள்ளது. ஜார்ஜியாவில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நிலைமை மோசமாகி வருகிறது. இதை தான் கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தங்கள் வசம் கொண்டுவர ஜார்ஜியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள ரஷியப் படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை வெள்ளிக்கிழமை முற்றியது. ரஷியப் படைகள் மீது ஜார்ஜியா படை திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தியது.


தாய்லாந்தில் ஹெலிகொப்டர் விபத்து 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் பலி

தாய்லாந்தில் ஹெலிகொப்டரொன்று விழுந்து 4 இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். உயரதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் தென் மாகாணமான யாலா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்த 10 பேரும் பலியாகியுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டம் நிறைந்ததாகும்.எனவே ஹெலிகொப்டர் இயல்பாகவே விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால், இது தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்காதென நம்புவதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் தீவிரம் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அகதிகளுக்கான தூதரக அதிகாரி ரான் ரெட்மெண்ட் கேட்டுக்கொண்டுள்ளார். அப்பாவி மக்களுக்கு சேதம் ஏற்படாதவாறு ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். அப்பாவிகளைக் காக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு தரப்பினரையும் அவர் கேட்டுக்கோண்டார். போர் நடைபெறும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இந்தச் சண்டையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துக் கூடாது. தாக்குதலின்போது பொது மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை வடக்குப் பகுதியில் தற்போது உணவு, இருப்பிடம், குடிநீர், எரிபொருள் சப்ளை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். ஜூலையில் மட்டும் இலங்கை வடக்குப் பகுதியிலிருந்து 12 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இலங்கை வடபகுதியில் மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும். இதற்கு இலங்கையில் உள்ள அனைத்து கட்சியினரையும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக விலக்கிக்கொண்டது. இதையடுத்து ராணுவத்தினர் இலங்கை வட பகுதி மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலில் ராணுவத்தின் கை ஓங்கி உள்ளதாகவும் இலங்கை அரசு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

ராகம விகாரையில் யானை மிரண்டது பெண் ஒருவர் பலி 32பேர் படுகாயம்

ராகமப் பகுதியில் உள்ள தல்கொல விகாரையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் யானை ஒன்று மிரண்டு ஓடியதில் அதன் காலில் மிதிப்பட்டு பெண்ஒருவர் உயிரிழந்தார். விகாரையில் நின்றவர்கள் பதற்றத்தில் தலைதெறிக்க ஓடியவேளையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 32பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது அந்த விகாரையில் நேற்று வருடாந்த பெரஹரா உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது பெரஹரா உற்சவத்திற்காக அந்த விகாரைக்கு கொண்டு வரப்பட்டிருந்த யானை ஒன்றே மிரண்டதாகவும் பொலிஸார் கூறினர். காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்றரின் பில்லியன் மடங்கு சிறிய நனோ அளவுத் திட்டத்திற்கு உட்பட்டவையாகும். இந்நிலையில் மேற்படி தொழில்நுட்பம் அபிவிருத்தி செய்யப்படும் பட்சத்தில் ஆளொருவரை முழுமையாக கண்ணுக்கு புலப்படாமல் மறைக்கக்கூடிய மேலாடைகளை உருவாக்குவது சாத்தியமாகும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானியான ஸியாங் ஷாங்கின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், "நேச்சர் அன்ட் சயன்ஸ்' ஆய்வு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்ப முறைமையானது நீர்வீழ்ச்சியொன்று பாறையை எவ்வாறு கண்ணுக்கு புலப்படாமல் மறைக்கின்றதோ, அது போன்று தொழிற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபருக்கு பின்னாலுள்ள ஒளியை அவரது முன்புறமாக குவியச் செய்வதன் மூலம், அந்நபரை மற்றவர்கள் பார்வையில் தென்படாமல் மறையச் செய்ய முடியும் என அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சியானது, இராணுவத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் மேற்கொள்ள உதவுவதை இலக்காகக் கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வன்னி மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் நிலை - ஐ.நா. முகவர் அமைப்புக்கள் தகவல்


வன்னியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சுக்களும் ஷெல் தாக்குதல்களும் எந்த வேளையிலும் இடம்பெறலாம் என்ற சூழ்நிலையில் அச்சத்தின் மத்தியிலேயே மாணவர்கள் பரீட்சைக்குச் செல்கின்றனர் என ஐ.நா. முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் ஏற்கனவே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி பரீட்சை ஆரம்பமான பின்னர் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களால் பரீட்சை நிலையங்களை இடம் மாற்ற வேண்டி ஏற்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஐ.நா. வின் முகவர் நிறுவனங்களின் நிலையியற் குழு, வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதனால் வன்னியில் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு தொடரும் விமானக் குண்டு வீச்சுக்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் மாணவர்கள் அச்சத்தின் மத்தியிலேயே பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிதாக இடம்பெயரும் மக்கள் தற்காலிக தங்குமிடத்தையும் உணவையும் பெறுவதற்கே பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

கம்பஹா, கண்டி பகுதிகளில் தேடுதல்; 19 தமிழர்கள் கைது

கம்பஹா, மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 19 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது கம்பஹா பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று இரவு முதல் சுமார் 5 மணிநேரங்கள் வரையில் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களே இத்தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை இன்று அதிகாலை கண்டி பொலிஸ் வளாகத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுமார் 27 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் பூநகரியை நோக்கி எறிகணைத் தாக்குதல்

யாழ்ப்பாண ஏரிப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து படையினர் நேற்று மாலை 6 மணியில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூநகரிப் பிரதேசம் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாரிய சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் குருநகர், கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் அரியாலை ஆகிய இடங்களின் மக்கள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஜோர்ஜியா மீது ரஸ்ய விமானங்கள் தாக்குதல் 2000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு

திபிலிஸி, ரஷ்ய யுத்த விமானங்கள் இரண்டாவது நாளாக ஜோர்ஜியா மீது குண்டுமாரி பொழிந்து வருவதால் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாகவும், கட்டிடங்கள், வீடுகள் என்பன தீ பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்குமிடையே முழு அளவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா 6000 துருப்புக்களை தரை மார்க்கமாகவும் 4000 துருப்புக்களை கடல் மார்க்கமாகவும் ஜோர்ஜியாவுக்குள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு இரு நாடுகளுக்கும் ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச சமூகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. ஜோர்ஜிய தலைநகர் திபிலிஸியில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையிலுள்ள இராணுவ விமானத் தளமொன்று ரஷ்ய படையினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்ஜியாவிலுள்ள சிவிலியன் இலக்குகள் மற்றும் இராணுவ இலக்குகள் மீது டசின் கணக்கான யுத்த விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் ஆயுத விநியோகத்திற்கு இந்தியாவின் மீது தங்கியிருக்கும் நிலை அதிகரித்துள்ளது- ஐ.ஏ.என்.எஸ் செய்திச் சேவை

இதேவேளை, தமிழ் நாட்டில் விடுதலைப் புலி உறுப்பினர்களும், அவர்களுக்கு உதவி செய்யும் இந்தியர்களும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதானதுவிடுதலைப் புலிகள் தமது ஆயுத விநியோகத்திற்கு இந்தியாவின் மீது தங்;கியிருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுவதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான இராணுவ மோதல் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலிருந்து தமக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜூலை முதலாம் திகதியிலிருந்து இதுவரை 7 இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை தமிழ் நாட்டுப் பொலிசார் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட கடற்புலித் தலைவர்களில் ஒருவரான தம்பி அண்ணா என்பவரும் அடங்குவதாக ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டடோரில் 7 பேர் பண ரீதியான இலாபத்தினைக் கருத்திற்கொண்டே விடுதலைப் புலிகளுக்கு உதவ முனைந்ததாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.
ஐஎன்லங்கா இணையம்குறிப்பாக, இந்த சந்தேகநபர்கள் விடுதலைப் புலிகளுக்கு தொலைத் தொடர்பு உபகரணங்களையே கடத்த முற்பட்டிருப்பதாகவும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தற்போது பாரிய வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதன்பொருட்டு இந்தியாவின் மீதும், தமிழ் நாட்டின் மீதும் புலிகள் தங்கியிருக்கவேண்டிய நிலை அதிகரித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வாவின் காடைத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவர் -இடதுசாரி முன்னணி

தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வழமையான கீழ்த்தரமான காடைத்தனத்தை ஜனாதிபதிக்குத் தெரியாமல் சிரச ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டிருக்க முடியாதென்றும், மேர்வின் சில்வாவுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவரென்றும் இடதுசாரி முன்னணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் காரியாலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே சிரச ஊடகவியலாளர்கள் பால திறப்பு விழாவுக்கு சென்றுள்ளனர். அங்கே பட்டப்பகலில் எல்லோர் முன்னிலையிலும் ஊடகவியலாளர்களை தாக்கியதுடன் ஊடக உபகரணங்களையும் மேர்வின் சில்வா கொள்ளையடித்துள்ளார். தொடரும் மேர்வின் சில்வாவின் அடாவடித்தனங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படா விட்டால் விரைவில் மக்கள் நலல பாடத்தைப் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளையில் போலி கச்சேரி கண்டுபிடிப்பு

கொழும்பு புறநகரான அவிசாவளை புவக்பிட்டியில் வீடொன்றில் இரகசியமான முறையில் இயங்கி வந்த போலி கச்சேரியை பொலீசார் நேற்று முன்தினம் கண்டுபிடித்துள்ளனர். இரகசிய தகவல் ஒன்றையடுத்தே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பொலீசார் நடத்தி சோதனையின்போது போலியான பிறப்பு சான்றிதழ்கள், வெற்றுப்பத்திரங்கள், திருமண, மரண சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள், அடையாளஅட்டைகள், முக்கிய அதிகாரிகளின் பெயருடைய றப்பர் முத்திரைகள், கடித தலைப்புக்கள், கடித உறைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியிருந்த மலையகத்தைச் சேர்ந்த இரு தமிழர் இளைஞர்களும் கைதாகியுள்ளனர். அவசாவளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சில ஊழியர்களின் தொடர்புகளும் உள்ளவென்று பொலீசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் சிலரை பொலீசார் தேடிவருகின்றனர்.

போலிக் கடவுச்சீட்டில் கனடா செல்ல முற்பட்ட இலங்கைப் பிரஜை சென்னையில் கைது

போலியான கடவுச்சீட்டு மூலம் கனடாவுக்குச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் சென்னை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய குடிவரவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கைப் பிரஜையான இவர் கொழும்பிலிருந்து திருச்சி சென்று பின்னர் சென்னையிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயற்சித்துள்ளார். இவருடைய கடவுச்சீட்டையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைப்பற்றியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி நொண்டிக்குதிரை இதனாலேயே அரசுடன் இணைந்துள்ளோம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்

பெல்மதுளை, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். யானைக்கு மேல் சேவல் போகலாம், கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவாணை கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பட்ட ஒருவருக்காக செயற்படாது மலையக சமூக நலன் கருதியே அன்று தொடக்கம் இன்றுவரை செயற்படுகின்றது.
மலையக மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய எண்ணுபவர்கள் இ.தொ.கா.வுடன் இணைந்தும் கொள்வார்கள். சுயநல நோக்கமுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். யார் வேண்டுமென்றாலும் வரலாம், போகலாம். ஆனால் இ.தொ.கா தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு மக்களின் பேராதரவு உள்ளது.
நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது குறித்து விமர்சனம் செய்யப்படுகின்றது. நாம் சிறுபான்மையினத்தவர்கள். தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவி வகிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் யார் என்பதனை தீர்மானிக்க முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கட்சியை ஆதரித்தோம். அக்கட்சி வெற்றி பெறவில்லை. நாம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலையில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளோம்.
ஐ.தே.க. தற்போதைய நிலையில் ஒரு நொண்டிக் குதிரை. அக்குதிரையில் ஓட முடியாது. ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் திகழ்கின்றது. இதனால்தான் நாம் அரசில் இணைந்துள்ளோம். இதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை விமர்சனம் செய்கின்றனர்.
சாதாரணமானவர்கள் கூட ஓடும், வெற்றி பெறும் குதிரைகளையே மட்டுமே விரும்புவார்கள். நொண்டிக் குதிரையை விரும்பமாட்டார்கள். நாமும் அதனை செய்கின்றோம்.

மேலும் யானைக்கு மேல் சேவல் போகலாம். அல்லது கதிரைக்கு மேல் வெற்றிலைக்கு மேல் சேவல் பயணம் செய்யலாம். எனினும் சேவலுக்கு மேல் எதனையும் பயணம் செய்ய இ.தொ.கா என்றுமே அனுமதிக்காது.
மத்திய, ஊவா மாகாணங்களிலும் இ.தொ.கா. ஆட்சியை அமைக்கும் சக்தியாகவுள்ளது. அதேபோல், சப்ரகமுவ மாகாணத்திலும் இந்த நிலை ஏற்பட எதிர்வரும் 23 ஆம் திகதி காலையில் முருகனை கும்பிட்டு விட்டு சேவலுக்கு வாக்களித்து நமது ஒற்றுமையையும், மலையக சமூகத்தின் பலத்தையும் நிரூபிக்குமாறு வேண்டுகின்றேன். இங்கு பிரதி அமைச்சர்களான எம். சச்சிதானந்தன், ஜெகதீஸ்வரன், முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

மன்னாரில் சிவில்நிருவாகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை -கரு ஜெயசூரிய

மாவட்டத்தின் சிவில் நிருவாகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் அரச சொத்துக்கள் யாவும் புலிகளினால் அழித்தொழிக்கப்பட்டுள்ளதோடு; சிவில் நிருவாகத்தையும் புலிகள் சீர்குலைத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.தற்போது அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்தினை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை தொடர்ந்து . படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்ட இரு பெண் விடுதலைப்புலி உறுப்பினர்களது சடலங்களை படையினர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.