பெல்மதுளை, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். யானைக்கு மேல் சேவல் போகலாம், கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவாணை கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனிப்பட்ட ஒருவருக்காக செயற்படாது மலையக சமூக நலன் கருதியே அன்று தொடக்கம் இன்றுவரை செயற்படுகின்றது.மலையக மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய எண்ணுபவர்கள் இ.தொ.கா.வுடன் இணைந்தும் கொள்வார்கள். சுயநல நோக்கமுள்ளவர்கள் வெளியேறி விடுவார்கள். யார் வேண்டுமென்றாலும் வரலாம், போகலாம். ஆனால் இ.தொ.கா தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு மக்களின் பேராதரவு உள்ளது.
நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது குறித்து விமர்சனம் செய்யப்படுகின்றது. நாம் சிறுபான்மையினத்தவர்கள். தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவி வகிக்க முடியாது. ஆனால் அரசாங்கம் யார் என்பதனை தீர்மானிக்க முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே. கட்சியை ஆதரித்தோம். அக்கட்சி வெற்றி பெறவில்லை. நாம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலையில் நாம் அரசாங்கத்துடன் இணைந்துள்ளோம்.
ஐ.தே.க. தற்போதைய நிலையில் ஒரு நொண்டிக் குதிரை. அக்குதிரையில் ஓட முடியாது. ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் திகழ்கின்றது. இதனால்தான் நாம் அரசில் இணைந்துள்ளோம். இதன் மூலம் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை விமர்சனம் செய்கின்றனர்.
சாதாரணமானவர்கள் கூட ஓடும், வெற்றி பெறும் குதிரைகளையே மட்டுமே விரும்புவார்கள். நொண்டிக் குதிரையை விரும்பமாட்டார்கள். நாமும் அதனை செய்கின்றோம்.
மேலும் யானைக்கு மேல் சேவல் போகலாம். அல்லது கதிரைக்கு மேல் வெற்றிலைக்கு மேல் சேவல் பயணம் செய்யலாம். எனினும் சேவலுக்கு மேல் எதனையும் பயணம் செய்ய இ.தொ.கா என்றுமே அனுமதிக்காது.
மத்திய, ஊவா மாகாணங்களிலும் இ.தொ.கா. ஆட்சியை அமைக்கும் சக்தியாகவுள்ளது. அதேபோல், சப்ரகமுவ மாகாணத்திலும் இந்த நிலை ஏற்பட எதிர்வரும் 23 ஆம் திகதி காலையில் முருகனை கும்பிட்டு விட்டு சேவலுக்கு வாக்களித்து நமது ஒற்றுமையையும், மலையக சமூகத்தின் பலத்தையும் நிரூபிக்குமாறு வேண்டுகின்றேன். இங்கு பிரதி அமைச்சர்களான எம். சச்சிதானந்தன், ஜெகதீஸ்வரன், முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

