இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு

மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்றரின் பில்லியன் மடங்கு சிறிய நனோ அளவுத் திட்டத்திற்கு உட்பட்டவையாகும். இந்நிலையில் மேற்படி தொழில்நுட்பம் அபிவிருத்தி செய்யப்படும் பட்சத்தில் ஆளொருவரை முழுமையாக கண்ணுக்கு புலப்படாமல் மறைக்கக்கூடிய மேலாடைகளை உருவாக்குவது சாத்தியமாகும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். விஞ்ஞானியான ஸியாங் ஷாங்கின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், "நேச்சர் அன்ட் சயன்ஸ்' ஆய்வு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்ப முறைமையானது நீர்வீழ்ச்சியொன்று பாறையை எவ்வாறு கண்ணுக்கு புலப்படாமல் மறைக்கின்றதோ, அது போன்று தொழிற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபருக்கு பின்னாலுள்ள ஒளியை அவரது முன்புறமாக குவியச் செய்வதன் மூலம், அந்நபரை மற்றவர்கள் பார்வையில் தென்படாமல் மறையச் செய்ய முடியும் என அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆராய்ச்சியானது, இராணுவத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் மேற்கொள்ள உதவுவதை இலக்காகக் கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.