இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

ஒழுக்க விழுமியமுள்ள மனிதர்களாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி சாத்தியம் - கெஹலிய

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒழுக்க விழிமியமுள்ள மனிதர்களாக நடந்துகொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி தொடர்பில் சிந்திக்க முடியும் என்று அமைச்சரும் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது. இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் 11 பேர் ஆஸ்பத்திரியில் இருவரின் நிலைமை கவலைக்கிடம்

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 பேர் படுகாயமடைந்து நிலையில் மாத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் கடந்த சில தினங்களாக வாய்த்தர்க்கம் இருந்ததோடு, இம்மாணவர்கள் இன்று மோதிக்கொண்டனர் என மாத்தரை பொலிஸார் தெரிவித்தனர். மோதலில் காயமடைந்த மாணவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதலில் ஈடுப்பட்ட மாணவர்கள் சிலரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அரசு பொறுப்பேற்கக் கோரிக்கை

நாட்டின் ஏனைய இடங்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் பொருடகளின் விலைகள் பல மடங்காக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இதனைக் குறைப்பதற்கு கப்பல் செலவை அராசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சமாதானத்தி;ற்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அமைப்பின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சங்கக் கடைகளில் சீனி 68 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்தாலும், ஒரு ஆளுக்கு அரை கிலோ மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், வெளிக்கடைகளில் 80, 90 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும், அரிசி 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், பரமநாதன் தெரிவித்துள்ளார். கெர்ழும்பில் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பூடு யாழ்ப்பாணத்தில் 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கொழும்பில் 60, 75 ரூபாவுக்குக் கிடைக்கின்ற உருளைக்கிழங்கின் யாழ்ப்பாணத்து விலை 150 ரூபா.
இத்தகைய அதிகரித்த விலையைக் குறைப்பதற்கு வழி கப்பல் செலவினங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். இது தான் விலைகளைக் குறைப்பதற்குரிய ஒரேயொரு வழி எனவும் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெணத்திற்குமான மக்கள் குழுவின் இணைச் செயலாளர் எஸ்.பரமநாதன் தெரிவித்துள்ளார்.

மடுக்கோவிலுக்குச் செல்ல தென்பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக, மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார்

விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திரு உருவச் சிலை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையடுத்து, மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழாவையொட்டி அங்கு செல்ல விரும்பும் தென்பகுதியில் உள்ள பக்தர்களுக்காக மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடுக்கோவிலைத் தூய்மைப்படுத்தும் சமயக்கிரியைகள் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டு, மடு அன்னையில் திரு உருவச் சிலை அதனுடைய பீடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவித்தார்.
எனினும் மதகுருமார்களைத் தவிர்ந்த வேறு எவரும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு நேற்று படையினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு அன்னை மீண்டும் மடுக்கோவில் பிரதிஸ்டை செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாரவில பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவர் மதவாச்சி மன்னார் வீதியில் உள்ள மடுக்கோவில் சந்தியில் வந்து காத்திருந்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தினால் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்காக தென்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மதவாச்சியைச் சென்றடைந்த சில பக்தர்களை பொலிசார் அங்கிருந்து 2 பஸ் வண்டிகளி;ல் மடுக்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாக மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றிற்கு 200 பக்தர்கள் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள அதேவேளை, மடுக்கோவிலுக்குச் செல்பவர்கள் அதே தினம் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என படையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழா நடைபெற மாட்டாது என்றும், காலை நேரத்தில் மாத்திரம் பூஜை நடைபெறும் என்று மன்னார் ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

கல்ப் டைம்ஸ் பத்திரிகை தனது பட விளக்கத்தில் விட்ட தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளது


ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்த புகைப்படத்தின் படவிளக்கத்தில் விடப்பட்ட தவறு தொடர்பில் கல்ப் டைம் பத்திரிகை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் தாம் மன்னிப்பு கோரியும் இந்த படம் மற்றும் படவிளக்கத்தையும் நாளை மீள் பிரசுரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.8.08 இல் 8 மணி 08 நிமிடத்தில் 8 இறாத்தல் 8 அவுன்ஸில்.. 2 குழந்தைகள்

8.8.08 இல் 8மணி 08 நிமிடத்தில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. அமெரிக்காவின் அயோவா,மின்னே சொட்டா ஆகிய அருகருகேயுள்ள மாநிலங்களில் இந்த இரு குழந்தைகளும் பிறந்திருக்கின்றன. நெய்லி ஜோ ஹொவர்,ஸாண்டர் கோய் நினிக்கர் ஆகிய இரு குழந்தைகள் 8 இறாத்தல் 8 அவுன்ஸ் எடையுடன் பிறந்திருக்கின்றன. ஸாண்டர் அவரின் தாய்வழி பாட்டன்,பாட்டிக்கு எட்டாவது பேரப் பிள்ளையாவார். ஜோ ஹொவர் பிறந்த மின்னே சொட்டா லேக்ரீயன் ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் இக்குழந்தை பிறந்த நேரத்தில் லொத்தர் சீட்டுகளை வாங்கினார்கள். இதேவேளை, ஸாண்டரின் தந்தையார் சாட் ரினிக்கர் கூறுகையில், 8 தனக்கு முன்னர் அதிர்ஷ்டமற்ற எண்ணாகும்.ஆனால், இப்போது லொத்தர் சீட்டை வாங்க தான் யோசிப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாது -மைத்திரிபால சிறிசேன

சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பீ.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

விருந்து உணவை உண்ட 60 பேர் வயிற்று நோவால் வைத்தியசாலையில் அனுமதி

வட்டவலை அகரவத்தை தோட்டப் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் பரிமாறப்பட்ட உணவை உண்ட 60 பேர் திடீர் வயிற்று நோவு கண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் கினிகத்ஹேன வைத்தியசாலையிலும் ஏனையோர் வட்டவளை மற்றும் நாவலப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வைபவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் வேண்டத்தகாதவர்களே உணவில் ஏதோ ஒன்றை கலந்து விட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் உணவில் எதுவும் கலக்கவில்லை எனவும் அருந்தும் நீரிலேயே குறிப்பிட்ட நபர்கள் ஏதோ பதார்த்தத்தை கலந்து விட்டிருக்கலாம் என வீட்டு உரிமையாளர் தெரிவிக்கிறார்

தவறு விட்ட பத்திரிகை


ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சீனாவுக்கு தனது பாரியாருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயம்.இது குறித்து கல்ப் டைம்ஸ் என்ற பத்திரிகை தனது பட விளக்கத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாரியாரை சிறிமாவோ பண்டாரநாயக்க என்று தவறாக குறிப்பிட்டுள்ளது.


நளினியின் விடுதலை தொடர்பான வழக்கில் 20ஆம் திகதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்துள்ள வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நளினிக்கு முன்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதும், அவரது கருணை மனுவின் மூலம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக நளினி தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நளினி கூறியிருந்ததாவது:
சிறை விதிகளின்படி 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதி நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவிடம் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு ஆலோசனைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே, இந்த முடிவை ரத்துச் செய்ய வேண்டும்; முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் நளினி கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடைபெற் வருகிறது. நேற்று இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி எதிர்வரும் 20ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இரண்டு இலங்கை தமிழர்களும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த இரண்டு மனுக்களையும் இதே வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நளினி ஆலோசனைக் குழுவிடம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கையும் தன்னுடன் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ராதாகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், அவரது வழக்கறிஞர் ரவி இந்த வழக்கோடு தங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எனினும், நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

வன்னியில் தொடர்ந்து இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைய வேண்டும்,அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு

வன்னியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து வரும் அதிகளவான மக்களுக்கு தேவையான உதவிகளும் அடிப்படை வசதிகளும் அவர்களை சென்றடைவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பின் சட்டவியல் மற்றும் கொள்கை பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளதாவது, வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான மனிதாபிமான பணிகள் மிகவும் நெருக்கடியானதாக உள்ளது.எனவே இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும்.களமுனைகளின் முன்னணி அரங்குகளில் யார் இருந்தாலும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பணிகள் சென்றடைவதற்கு அவர்கள் உதவி புரிய வேண்டும்.தற்போது வட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவது எமக்கு கவலையை தோற்றுவித்துள்ளது. அவர்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவி பொருட்களும் கிடைப்பதில்லை.வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மரங்களின் கீழ் வாழ்வதாக மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. போரினால் பாதிப்படைந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை தொடர்பாக நாம் அதிக கவலை அடைந்துள்ளோம். இந்த பாதகமான நிலை மேலும் மோசமடைவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனுசரணைகளை வழங்க வேண்டும் என்பதே போரியல் சட்டமாகும்.

மடுமாதாவை வழிபட தினமும் 200 பக்தர்களுக்கு அனுமதி - பாதுகாப்பு அமைச்சு

நாட்களுக்கு மடு திருப்பதி பிரதேசத்திற்கு தினமும் 200 பக்தர்கள் சென்று வழிபாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மடு புனிதத்தல பிரதேசத்திற்கு பொது மக்கள் பகல் வேளைகளில் பிரவேசிக்க முடியும் எனவும் அங்கு சமய வழிபாடுகளில் ஈடபட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இன்று இரவு அறிவித்துள்ளது.
மடு தேவாலயத்தை சூழவுள்ள பிரதேசங்களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் தினமும் 200 பக்தர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு,தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிபானங்களை வழங்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2008-08-11

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலி

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா மாகாணத்தில் அந்நாட்டு படைக்கும், ரஷியப் படைக்கும் இடையே இதுவரை நடந்த சண்டையில் 1,500 பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்க்கெய் லெவ்ரோவ் சனிக்கிழமை ஒத்துக்கொண்டுள்ளார். இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையேயான மோதலால் ஜார்ஜியாவில் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நிலையில் ரஷியாவின் தாக்குதலில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஜார்ஜியா நினைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, கடந்த சில தினங்களாக ஜார்ஜியா மீது நடத்தி வரும் தாக்குதலை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஜார்ஜியாவின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் ரஷியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. பிரச்னையை சர்வதேச நடுநிலைக் குழு மூலம் சுமுகமாகத் தீர்த்து வைக்க ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷியா ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும் என, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ள தங்களது நாட்டுப் படை வீரர்களை எந்தச் சூழ்நிலையிலும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ஜார்ஜியாவுடனான போர்நிறுத்த உடன்பாட்டை நிலைநிறுத்த முயற்சிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. எச்சரிக்கை: ஜார்ஜிய ராணுவத்துக்கும் ரஷிய ராணுவத்துக்கும் இடையேயான சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. கண்டித்துள்ளது. ஜார்ஜியாவில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, நிலைமை மோசமாகி வருகிறது. இதை தான் கடுமையாக கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜியாவின் தெற்கு ஒசெட்டியா ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தங்கள் வசம் கொண்டுவர ஜார்ஜியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள ரஷியப் படைகளுக்கும், அந்நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டை வெள்ளிக்கிழமை முற்றியது. ரஷியப் படைகள் மீது ஜார்ஜியா படை திடீரென அதிரடித் தாக்குதல் நடத்தியது.


தாய்லாந்தில் ஹெலிகொப்டர் விபத்து 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர் பலி

தாய்லாந்தில் ஹெலிகொப்டரொன்று விழுந்து 4 இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். உயரதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் தென் மாகாணமான யாலா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பயணித்த 10 பேரும் பலியாகியுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டம் நிறைந்ததாகும்.எனவே ஹெலிகொப்டர் இயல்பாகவே விபத்துக்குள்ளானதா அல்லது தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால், இது தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்காதென நம்புவதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் தீவிரம் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அகதிகளுக்கான தூதரக அதிகாரி ரான் ரெட்மெண்ட் கேட்டுக்கொண்டுள்ளார். அப்பாவி மக்களுக்கு சேதம் ஏற்படாதவாறு ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். அப்பாவிகளைக் காக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு தரப்பினரையும் அவர் கேட்டுக்கோண்டார். போர் நடைபெறும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இந்தச் சண்டையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துக் கூடாது. தாக்குதலின்போது பொது மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை வடக்குப் பகுதியில் தற்போது உணவு, இருப்பிடம், குடிநீர், எரிபொருள் சப்ளை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். ஜூலையில் மட்டும் இலங்கை வடக்குப் பகுதியிலிருந்து 12 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இலங்கை வடபகுதியில் மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும். இதற்கு இலங்கையில் உள்ள அனைத்து கட்சியினரையும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக விலக்கிக்கொண்டது. இதையடுத்து ராணுவத்தினர் இலங்கை வட பகுதி மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலில் ராணுவத்தின் கை ஓங்கி உள்ளதாகவும் இலங்கை அரசு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.