இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

இலங்கையில் போர் தீவிரம் அப்பாவி தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தச் சண்டையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அகதிகளுக்கான தூதரக அதிகாரி ரான் ரெட்மெண்ட் கேட்டுக்கொண்டுள்ளார். அப்பாவி மக்களுக்கு சேதம் ஏற்படாதவாறு ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். அப்பாவிகளைக் காக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரு தரப்பினரையும் அவர் கேட்டுக்கோண்டார். போர் நடைபெறும் பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இந்தச் சண்டையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துக் கூடாது. தாக்குதலின்போது பொது மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கை வடக்குப் பகுதியில் தற்போது உணவு, இருப்பிடம், குடிநீர், எரிபொருள் சப்ளை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வருவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டிக்கொண்டார். ஜூலையில் மட்டும் இலங்கை வடக்குப் பகுதியிலிருந்து 12 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இலங்கை வடபகுதியில் மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும். இதற்கு இலங்கையில் உள்ள அனைத்து கட்சியினரையும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தன்னிச்சையாக விலக்கிக்கொண்டது. இதையடுத்து ராணுவத்தினர் இலங்கை வட பகுதி மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத் தாக்குதலில் ராணுவத்தின் கை ஓங்கி உள்ளதாகவும் இலங்கை அரசு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.