இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

வன்னியில் தொடர்ந்து இடம்பெயரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடைய வேண்டும்,அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவிப்பு

வன்னியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து வரும் அதிகளவான மக்களுக்கு தேவையான உதவிகளும் அடிப்படை வசதிகளும் அவர்களை சென்றடைவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பின் சட்டவியல் மற்றும் கொள்கை பிரிவு பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளதாவது, வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான மனிதாபிமான பணிகள் மிகவும் நெருக்கடியானதாக உள்ளது.எனவே இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும்.களமுனைகளின் முன்னணி அரங்குகளில் யார் இருந்தாலும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பணிகள் சென்றடைவதற்கு அவர்கள் உதவி புரிய வேண்டும்.தற்போது வட பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவது எமக்கு கவலையை தோற்றுவித்துள்ளது. அவர்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவி பொருட்களும் கிடைப்பதில்லை.வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மரங்களின் கீழ் வாழ்வதாக மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. போரினால் பாதிப்படைந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலை தொடர்பாக நாம் அதிக கவலை அடைந்துள்ளோம். இந்த பாதகமான நிலை மேலும் மோசமடைவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனுசரணைகளை வழங்க வேண்டும் என்பதே போரியல் சட்டமாகும்.