இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

மடுக்கோவிலுக்குச் செல்ல தென்பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக, மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார்

விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திரு உருவச் சிலை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையடுத்து, மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருவிழாவையொட்டி அங்கு செல்ல விரும்பும் தென்பகுதியில் உள்ள பக்தர்களுக்காக மதவாச்சியில் 20 பஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மடுக்கோவிலைத் தூய்மைப்படுத்தும் சமயக்கிரியைகள் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டு, மடு அன்னையில் திரு உருவச் சிலை அதனுடைய பீடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை தெரிவித்தார்.
எனினும் மதகுருமார்களைத் தவிர்ந்த வேறு எவரும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு நேற்று படையினர் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மடு அன்னை மீண்டும் மடுக்கோவில் பிரதிஸ்டை செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாரவில பகுதியில் இருந்து மூதாட்டி ஒருவர் மதவாச்சி மன்னார் வீதியில் உள்ள மடுக்கோவில் சந்தியில் வந்து காத்திருந்ததாகவும், எனினும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தினால் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மடுக்கோவிலுக்குச் செல்வதற்காக தென்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மதவாச்சியைச் சென்றடைந்த சில பக்தர்களை பொலிசார் அங்கிருந்து 2 பஸ் வண்டிகளி;ல் மடுக்கோவிலுக்கு அனுப்பி வைத்ததாக மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றிற்கு 200 பக்தர்கள் மடுக்கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள அதேவேளை, மடுக்கோவிலுக்குச் செல்பவர்கள் அதே தினம் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும் என படையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழா நடைபெற மாட்டாது என்றும், காலை நேரத்தில் மாத்திரம் பூஜை நடைபெறும் என்று மன்னார் ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.