இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-12

நளினியின் விடுதலை தொடர்பான வழக்கில் 20ஆம் திகதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்-தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி தொடர்ந்துள்ள வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நளினிக்கு முன்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதும், அவரது கருணை மனுவின் மூலம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக நளினி தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நளினி கூறியிருந்ததாவது:
சிறை விதிகளின்படி 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதி நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவிடம் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு ஆலோசனைக் குழுவால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே, இந்த முடிவை ரத்துச் செய்ய வேண்டும்; முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் நளினி கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகமுத்து முன்னிலையில் நடைபெற் வருகிறது. நேற்று இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி எதிர்வரும் 20ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதேபோன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இரண்டு இலங்கை தமிழர்களும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த இரண்டு மனுக்களையும் இதே வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், நளினி ஆலோசனைக் குழுவிடம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கையும் தன்னுடன் சேர்த்து விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி ராதாகிருஷ்ணன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், அவரது வழக்கறிஞர் ரவி இந்த வழக்கோடு தங்களது வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். எனினும், நீதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.